Monday, February 5, 2018

நீலா

இந்தியாவின் கூட்டுக் குடும்ப வாழ்வு அவ்வப்போது நினைவில் வருவது உண்டு. சிறுமியாய் நான் வளர்ந்து வந்த தருணங்களில், நான் கேட்டுக் கொண்டே இருந்த அந்த சப்தங்கள்.
எப்போதும் ஏதோ ஒன்று.பேச்சும் சிரிப்பும்,குழந்தைகள் அழுகையும் கொஞ்சலும்,கத்திக் கூச்சலிட்டு விளையாடியதும்,இல்லத்து
அரசிகளான அம்மாக்கள்,அத்தை, சித்தி, பெரியம்மா அனைவரின் அரட்டையிலும் நிறைந்த அடுக்களை.
இந்த சப்தங்களின் நடுவே பழகிப்போயிருந்ததால்,அதுவே பிடித்தமும் ஆயிற்று. பள்ளி நாட்களிலும் கூட நான் அமைதியாக இருந்தது நினைவில் இல்லை.விடுதியில் தங்கி படித்த சமயம்.நான் அமைதியாக இருந்ததாக நிஜமாய் நினைவில் இல்லை.ஒன்று,யாரோடேனும் பட பட என்று பேசிக்கொண்டிருப்பேன்.இல்லையேல், எவருடைய பேச்சையேனும் கேட்டுக் கொண்டிருப்பேன். என் வாழ்கையில், முதன் முறையாக நான் அமைதியை உணர்ந்தேன்,என் மகள் நீலா, பிறந்த போது.
அறுவை சிகிச்சைக்குபின், பிரசவ அறையிலிருந்து மீட்பு அறைக்கு நான் இடம் மாற்றப்பட்டு மூன்று நாட்கள் தங்க நேர்ந்தது. செவிலியர்களும் சுற்றமும் நட்பும் அருகில் இல்லாத வேளையில், முழுமையான நிசப்தம் உணர்ந்தேன். ஏனென்றால்,என் குழந்தை என்னுடன் விழித்துக் கொண்டுதான் இருந்தாள்,ஆனால் அமைதியின் வடிவமாய். எப்போதெல்லாம் தந்தை தன் கைகளில் ஏந்தி, அவளின் நெற்றியை வருடியபடி பேசினாலும் கொஞ்சினாலும்,அவள் தலையை பின் இழுத்து விலக்கினாள்,மென்மையான புன்முறுவலுடன். பத்து மாதமாய் அமைதியாய் என் உள்ளிருந்த சிசு தானே, இப்போது என் முன் பிறந்த குழந்தையாய்!.இப்படித்தான் போலும், எல்லாப் பச்சிளங் குழந்தைகளும் என்றிருந்தேன்.
பெரும்பாலும் நீலா இப்படி அமைதியாகவே இருந்தாள், பசிக்கு அழும் வேளைகளில் தவிர. மூன்று நான்கு மாதங்கள் வரை கைக் குழந்தைகள் பெரிதும் ஒன்றும் செய்யாது எனக் கேட்டதுண்டு.அதனால், மற்ற குழந்தைகளைப்  போல் தான் வளர்கிறாள் என்று இவளிடம், நேரத்திற்கு உறக்கமும்,பால் அருந்துதலும்,மலம் கழித்தலும் தவிர எதையும் எதிர்பார்க்கவில்லை நான். ஐந்து மாதங்கள் கழிந்தும், இவளிடம் பெரிதாய் சப்தங்கள் எழாதிருந்தது மனதை என்னவோ செய்தது. பெரும்பாலும் இவள் தூக்கத்திலிருந்து எப்போது விழித்து எழுகிறாள் என்பதை, நானும் விழித்திருந்து அறிய தவறினேன். நன்கு நினைவில் நிட்க்கிறது. அவளை எழுப்பச் செல்கையில் அவள் முன்பே விழித்திருந்ததும்  மேற்க்கூரையையோ, எங்கோ எதையோ அவள் நோக்கியபடி படுத்துக்கிடந்ததும். அப்போதும் கூட, தூக்கம் கலைந்து எழுகையில் எவரும் தேவைப்படவில்லை போலும் என் சிந்தனை சிகரத்திற்கு என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு முறை அவள் விழித்தெழும் போதும் அவள் அழுவதோ சப்தமிடுவதோ இல்லை என்பதும் எனக்குப் பழகிப்போயிற்று.
ஒரு நாள், நீலா ஆறு மாத குழந்தையாய் இருந்த போது,பாலூட்டிய பின் அவளை படுக்கையில் கிடத்தினேன்.நன்று உறங்கியவளை ரசித்தபடியே பக்கத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன்.சிறிது நேரத்திலேயே அவள் விழித்ததும் இன்றி,நீலாவின் வலது கால் இழுப்புகளால்,அவள் அச்சுற்றதையும் பார்த்து அதிர்ந்தே போனேன்.அவள் சின்னஞ்சிறு கைகளை தன் கழுத்தருகே கொண்டு சென்று பயந்த பார்வை பார்த்தது என் நெஞ்சைப் பிசைந்தது.அப்போதும் கூட அழுகாமல்,முழு அமைதியுடன்  அவள்.
அறை முற்றிலும் நிசப்தம் நிறைந்திருக்க என் இதயம் மட்டும் பட படத்தது.அவளை உடனே பற்றி எடுத்து அணைத்தபடி நான் சமையலறை வர நடக்க,கால் இழுப்பும் துடிப்பும் சில நொடிகளில், நின்றது.அவள் சற்று நிம்மதி பெருமூச்சற்றாள்.வேறு சப்தமோ அழுகையோ ஒன்றுமே இல்லை.வெறும் அமைதி.
அந்த ஒரு முறை மட்டும் அல்ல, மீண்டும் ஒவ்வொரு முறையும் தூங்கி எழும் வேளைகளில் எல்லாம் அவ்வப்போது இழுப்பு வந்ததும் அச்சமுற்றாளே தவிர அழவோ சத்தமிடுதலோ இல்லை.நீலா,குழந்தையாய் இருக்கும் போது , பெரும் உணவு விரும்பி என்றும் சொல்வதற்க்கில்லை.உணவை ஊட்டும் போதெல்லாம், பசி இருந்தால் புசிப்பதும் இல்லையேல் தன் கோபத்தை எனக்கு வெளிப்படுத்த தன் பின்னங்கையை தானே கடித்துக்கொள்வாள். நீலா பத்து மாதக் குழந்தையாய் இருந்த போது மருத்துவமனையில் அனுமதித்திருந்த நேரம்,நிமோனியா எனும் நுரையீரல் அழற்சியால் அவள் அவதிக்குள்ளானாள்.அவளாள் சரி வர உணவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவள் தொட்டிலினில் கிடந்து பாலையாவது குடிக்கட்டுமே என்று பால் புட்டியைக் அவள் வாயருகே கொண்டு செல்ல,மெல்ல தலை அசைத்து வேண்டாமென்று மறுத்தாள்.
அவள் ஒரு வயதை தொட்டதும், அவள் பிறந்த நாளுக்காக, சாக்லேட் கேக் செய்து , மேஜையில் வைத்து நீலாவை முன்னிருத்தினேன். ஆவலும் உற்சாகமுமாய் நீலா. ஆனால் அதையும் அமைதியாகவே வெளிப்படுத்தினாள்.நான் அவளிடம் கண்டது ஒன்று.ஆனால் கேட்டது வேறு. அவள் ஆர்ப்பரிக்காமல் இருந்ததும் ஆனால் அகம் மகிழ்ந்ததும்  என்னால் இணைத்துப் பார்க்க முடியவில்லை.இது மிக கடினம்.நிசப்தமாக உற்சாகமடைய முடியுமா? இது,இந்த முரண் வெகுவாக வலித்தது.
குறிகை மொழியோ சைகை மொழியோ அவள் கற்க இயலாமல் போனது.காரணம், அவள் ஏழு மாத குழந்தையாய் இருந்த வரை,தலை நிற்காது சற்றே நடுக்கமும்,கைகள் காற்றில் அலைபாய்ந்ததும்,அவள் சமநிலை பெறாத குழந்தையாய் இருந்ததும் தான். நீலாவின் தற்போதைய வயது பதினொன்று. என் கைகளைப் பிடித்தபடி  அவள் நடை பழகிவிட்டாள் . இப்போது நடக்கிறாள். இவ்வளவு நாட்களும் வருடங்களும்,அவள் மொழியத் தவறியதில்லை.நான் அதைப் புரிந்து உணராமலும் இல்லை.பெரும்பாலும் அவளின் மொழிதலும்,அவள் எதை எல்லாம்  உணர்த்த நினைக்கிறாளோ அதை அனைத்தும் சுலபமாகவே நானும் உணர்கிறேன்.மொழியாதவர்க்கென சைகை மொழி இருந்தாலும், அதை கற்க முடியாதவளாயினும், என் மகள் இனிதே திறம்பட மொழிகிறாள் தினமும்.நான் அவளிடம் கற்றது "மெளன மொழி ". ஆம். தினமும் ஓயாமல் பேசுகிறாள் " மெளனம் ".

Friday, November 10, 2017

பிறந்த நாள்_2017


நட்பின் நல்வாழ்த்துடன்
நவம்பர் ஆறு.
நானோ
உறங்கிப் போக,
நடுஇரவில் விழித்து
நித்தம் சிரித்திரு
எனக்கென ! என்றுரைத்து
கண் கசியச் செய்தார், கணவர்.
சை! கைப்பேசியோடு முடிந்ததே
விரைவான வாழ்த்து!
வாழ்கையே விலகியதுபோன்ற
உணர்வொடு முட்பத்தி மூன்றும்
கழிந்ததெப்படியென சிந்தையில்
கண் அயர, நான்
உறங்கிப் போகாமல்,முட்பத்தி நான்கும்
நல்விடியலோடே தொடர்ந்தது.
விழித்தெழுந்ததும்,
வாய் நிறைந்த வாழ்த்தொடு
மகள்,மகன்களருகே...
வயதில் மூத்தவர்களும்,
அவர்கள் ஆசியுடன் !!
சிறுமியாய் நான் ,
கிறுக்கிய கருத்தெல்லாம்
கவிதை புத்தகமாய்
கைகளில் ! கனவோ என்றே
நினைந்து எழ,
கால்கள் தரைத்தொட்டு
நிஐம் உணர்த்தியது.
நட்பும் உறவுகளும்
எனக்கென்றே படைத்ததுபோல் !
எவ்விதமென்று எடுத்தரைக்க
இயலா இன்பம்.
இறைக்கு நன்றி சொல்லி
இனிதே தொடங்கினேன்..
நவம்பர் ஏழு.
நாள் நகர்ந்து,நாளையும் வந்தது.
பிறந்த நாள் பரிசென
சில..
ஆடை ,ஆபரனம்
அழகு சாதனம், திகட்டும்
இனிப்பும், உணவும்.
அவற்றோடு நினைவுகளும்
சேமித்தேன்..
பல.
மழலைகள் ஆட்டமும் ஓட்டமும்,
அவர்களின் பாடலும் பண்பும்
அடேயப்பா !
கற்றுக்கொடுக்கிறான் கடவுள்.
என் ஆயுள் நிஐமாக நானறியேன்.
ஆனால், அதிர்ஷ்டம் என்பதே
நான் தான்.
நன்றியொடும் அடக்கத்தோடும்
நிதமும் வேண்டுகிறேன்
நல் எண்ணம் மட்டும்.

_ Dated Nov 8th,the day after my Birthday







Deputy General Manager


விரும்பி உண்பவருக்குத்தான்
வலுவான உடல் அமையுமென கேட்டதுண்டு.
எதையெல்லாம் விரும்பி
உண்பாரோ தெரியாது.
எதையுண்டாலும் விரும்பியே
உண்பார் தெரியும்.
வீட்டில் மனைவி மக்கள்
ஓய்வெடுத்து களைப்பாற
இடைவிடாது உழைக்கும்
Bean Bag.

_ In the memory Anto Sir _ who looks so huge and Obese.

இயற்கை


இரவும் பகலும்
எதற்காகவும் யாருக்காகவும்
நில்லாமல்,நிதமும்
தோன்றும் வரம்.

இனிப்பும் கசப்புமாய்
எதவரினும் ஏற்ப்பேன்
என் இறுதி வரை.
இயற்கை இருக்கும் வரை.

_ on Shruthi's request.

உனக்காக


கதி கலங்கச் செய்தவரை
கனவிலிருந்தும் களை.
நொந்து நோகச் செய்தவரை
நினைவிலிருந்து ஒதுக்கு.
காத்திருந்ததற்க்கும்
பொறுத்துப் போனதற்க்கும்
அர்த்தம் உண்டு.
குணமே அதுவென்றாகா..
மாசுள்ள மனமும்
மதி பெற்று தெளியும்
மதியழகும் மேன்மைபெறும்
அந்தத்தில் உன்னடிமை
யென்றான பின் ! 

வானதி

கரு நீல மயிலாக
கதைக்கும் கண்ணோடு
களிப்பூட்டும் சிரிப்புடன்
என் முன், வானதி.
கண்ணூறு படும் முன்
கடவுளைக் கேட்கிறேன்
வளமாக வாழட்டும்
எப்போதும் அழகாக
இதே சிரிப்புடன்.

Saturday, October 7, 2017

சுடச் சுட சுவையான பொலீஸ்

கதை சொல் கண்ணா என்றதுமே
நொடியில் கதைத்தான்
கண்ணுறங்கும் வேளையிலே..
கதைச் சொல்லி இளைப்பாறினான்.
மூன்றே வயதான
மாமனிதன் என் மகன்.

காவல் படையிலும் அதன் உடையிலும்
தீராக் காதல் கொண்டவன்.

கதைத் துவக்கம் இப்படி !

ஒரு ஊர்ல ஒரு...

சுடச் சுட

சுவை யாக இருந்தாராம் 

ஒரு பொலீஸ் !

உரக்கச் சிரித்தே  உள்ளத்தின்
உண்மை அன்புணர்ந்தேன்.

உரிச்சொற்கள் உண்டென்றறிந்தும்

பிழைத்திருத்தம் செய்யும்

மனமில்லாமல் !